கரூர்
கரூர் அமராவதி ஆற்று கரையோரம் பொதுமக்கள் தேங்காயை சுட்டு கொண்டாட்டம்
|ஆடி மாதம் பிறப்பையொட்டி, கரூர் அமராவதி ஆற்று கரையோரம் பொதுமக்கள் தேங்காயை சுட்டு கொண்டாடினார்கள்.
ஆடி மாதம்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகுந்த மாதம் என்று அழைக்கும் வகையில், அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் விசேஷ நிகழ்ச்சிகள் களைகட்டும். இந்த மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு என்று தமிழகம் முழுவதும் விழாக்கோலம் காணும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆடி முதல் நாளே இந்த கொண்டாட்டம் களைகட்டி விடும். அதாவது அன்றைய தினம் தேங்காய் சுடும் பண்டிகையுடன் பக்தர்கள் அம்மன் வழிபாட்டை தொடங்கி விடுவார்கள்.அதன்படி, நேற்று ஆடி மாதம் பிறந்ததையொட்டி கரூர் அமராவதி ஆற்று படிக்கட்டுதுறை பகுதியில் பொதுமக்கள் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
அமராவதி ஆற்று கரையோரம்
இதற்காக அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேங்காய்களை சுடும் அழிஞ்சி குச்சி மற்றும் தேங்காய்களை வாங்கினர். அவ்வாறு வாங்கி வந்த தேங்காயை தரையில் நன்றாக உருட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் தேங்காயில் உள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை, எள், அவல் உள்ளிட்ட பொருட் களை உள்ளே போட்டு மூடினர். பின்னர் நெருப்பு மூட்டி அரை மணி நேரத்திற்கு மேலாக சுட்டனர். நன்றாக சுடப்பட்ட தேங்காயை உடைத்து, அமராவதி ஆற்று கரையோரத்தில் உள்ள விநாயகருக்கு படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.
இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடந்த மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டுமென்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின் போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாகப் படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
வேலாயுதம்பாளையம்-நொய்யல்
வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளிலும் தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சுடப்பட்ட தேங்காயை உடைத்து, விநாயகருக்கு படையலிட்டு உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.