சேலம்
காவிரி கரைகளில் களை கட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
|சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உள்பட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களை கட்டியது.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உள்பட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களை கட்டியது.
ஆடிப்பெருக்கு
சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் காவிரி ஆற்றங்கரைகளில் களை கட்டும். குறிப்பாக மேட்டூரில் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் புனித நீராட திரண்டு வருவார்கள்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து திடீரென அதிகரித்தது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் 16 கண் மதகுகள் மற்றும் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
புனித நீராட தடை
இதையடுத்து மேட்டூர் அணை முனியப்பன் கோவில் பகுதி தவிர்த்து மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் கருதி ஆடிப்பெருக்கு அன்று பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆடிப்பெருக்கான நேற்று மேட்டூருக்கு புனித நீராட காலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக தான் இருந்தது. மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனை வழிபட்டனர்.
மேலும் மேட்டூருக்கு வந்த புதுமண தம்பதிகள், தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, விட்டு காவிரி அன்னையை வழிபட்டனர். பக்தர்களில் ஒரு சிலர் ஆடு, கோழி பலியிட்டு முனியப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
பின்னர் நண்பகலுக்கு மேல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேட்டூருக்கு அதிகளவில் வந்தது. குறிப்பாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் உபரி நீராக அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டதால், 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
இதையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி பாலம் பகுதியில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள், தின்பண்ட கடைகள், ராட்டினம் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் பூங்காவை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும், பொன்நகர், குள்ளவீரன்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோன்று மேட்டூர் 16 கண் பாலம் அருகே உள்ள புதுப்பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேவூர்
இதேபோல், சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வழக்கமாக தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராட வருவார்கள். இந்த ஆண்டு நீர்வரத்து அதிகரித்ததால் இங்கு புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, வேலாத்தா கோவில், ராமக்கூடல் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரைகளில் பக்தர்கள் ஆடிப்பெருக்கையொட்டி புனித நீராடினர்.
இங்கு வந்த பக்தர்கள், தங்கள் தலைகளில் செல்லாத காசுகள் மற்றும் அருகம்புல்லை வைத்து மூழ்கி புனித நீராடினர். மேலும் தங்கள் வாகனங்களை காவிரி ஆற்று நீரில் கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் இட்டனர்.
முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்சிலையை சாமியாக வைத்து பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விட்டதுடன், சில புதுமண தம்பதிகள் புதிய மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.
மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் ஊர்களில் உள்ள குலதெய்வ கோவில்களில் இருந்து வேல், ஈட்டி, கத்தி மற்றும் சாமி சிலைகளை எடுத்து வந்து காவிரி ஆற்றில் கழுவி புனித நீராடினர். பின்னர் தீர்த்தக்குடத்துடன், சாமி சிலைகள் மற்றும் பொருட்களை தங்கள் சொந்த ஊருக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
எடப்பாடி, கஞ்சமலை
இதேபோல் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி காவிரி கால்வாயில் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் புனிதநீராடினர்.மேலும் சாமி சிலைகளை கழுவி சுத்தம் செய்து ஊர்வலமாக தங்கள் ஊர்களுக்கு எடுத்து சென்றனர். மேலும் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில், நந்திகேஸ்வரர் கோவில், காவிரித்தாய் கோவில், விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்ைகயொட்டி சாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை முதலே பக்தர்கள் திரளாக வந்து கோவில் புனித தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள உப்புக்குளத்தில் மரு மற்றும் தோல் வியாபாதிகள் நீங்க உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றி ேபாட்டு வேண்டிக்கொண்டனர்.
மேலும் சித்தர் கோவில், இடங்கணசாலை, இளம்பிள்ளை, திருமலைகிரி, சின்னப்பம்பட்டி, கே.ஆர்.தோப்பூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வேல், கத்தி, சாமி சிலைகள் மற்றும் பொருட்களை கோவில் நீரோடைகளிலும், தீர்த்தக்குளங்களிலும் கழுவி பூஜைகள் செய்தனர். பின்னர் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக தங்கள் ஊர்களுக்கு கொண்டு சென்றனர்.
முத்துமலை முருகன்
புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முருகன் கையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்தனர். நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினர்.