கிருஷ்ணகிரி
முருக்கம்பள்ளத்தில்பாஞ்சாலி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
|பர்கூர்:
பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த பாஞ்சாலி அம்மன் கோவிலில் 49-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பால்குடம் எடுத்தலும், பாஞ்சாலி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முன்னதாக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருவீட்டார் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டில் இருந்து பெண்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதையடுத்து திருமண கோலத்தில் பாஞ்சாலியம்மன், அர்ச்சுனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமணத்திற்கு மொய் எழுதி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.