கரூர்
கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
|கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு வேடமணிந்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறப்பு பூஜை
கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூரில் உள்ள வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெண்ணெய், முறுக்கு மற்றும் பலவிதமான திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கரூர், அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணர், ராதை வேடம்
இதேபோல் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குளித்தலை பகுதியில் உள்ள கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதுபோல பல்வேறு வீடுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் தரித்து மகிழ்ந்தனர். வீட்டு வாசலில் இருந்து பூஜை அறைக்கு கிருஷ்ணர் நடந்து வருவதுபோல அரிசி மாவில் பாதங்கள் வரைந்து வைத்தனர். மேலும் வீடுகளில் கிருஷ்ணன் படம் மற்றும் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
நொய்யல்-தோகைமலை
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகள் கிருஷ்ணரின் பல்வேறு அவதார வேடம் அணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள கிருஷ்ணரின் உருவப்படம், சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.