புதுக்கோட்டை
உலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்: வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்
|பெண்கள் எல்லாத்துறைகளிலும் இப்போது வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அவர்கள் சாதனை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகளிர் குல மாணிக்கங்கள்
தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி என உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். இந்த பாத்திரங்களில் எதையும் நிராகரித்து எந்த ஆணாலும் வாழ்ந்து விட முடியாது. 'உலகம் அனைத்தையும் கட்டி காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலைமன்றங்கள் யாவும் பெண்களே' என்றார் ஷேக்ஸ்பியர். அந்தளவு உலகில் சிறப்புக்குரியவர்கள் பெண்கள்தான். அதனால்தான் நதிகள் தொடங்கி மலைகள் வரை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்ற நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று அவர்கள் தொடாத உயரமே இல்லை, எட்டாத உச்சம் இல்லை. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் கோலோச்சும், சாதனை படைத்து வரும் மகளிர் திலகங்களை இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். இடர்ப்பாடுகளையும், சிக்கல்களையும் கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.
புதுமைப்பெண் திட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) செல்வி:- பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதிக்க வேண்டும். எந்த துறையிலும் தைரியத்துடன் பணியாற்ற வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது பெண் குழந்தைகள் உயர் கல்வி படிப்பை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய கால இளம்பெண்கள் தங்களது இலக்கை அடையும் வரை பயணிக்க வேண்டும். பெண்களுக்கான சம உரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் மாநிலத்தில் முதல் இடம் வகிக்கும் வகையில் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். குடும்பத்தில் பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரி படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி கற்றது போல் ஆகும்.
அனைத்து துறைகளிலும் சாதனை
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே:- பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை மட்டும் இன்னாளில் கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் சமத்துவத்தின் நோக்கம், பெண்ணுரிமை பற்றி பேசப்படுகிறது. பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டனர். பெண்கள் பணிபுரியாத இடங்களே இல்லை. பெண்களுக்கான முழு உரிமைகளும் சுதந்திரமாக கிடைக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பெண்கள் மரியாதையாக போற்றப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானதில் கடுமையான சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் இளம்பெண்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றனர். பாதுகாப்பு துறையிலும் பெண்கள் பணியில் சேர்ந்து பெருமை சேர்க்கின்றனர். ஒவ்வொரு பெண்களுக்கும் தாங்கள் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு
வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ஆரோக்கியமேரி:- இன்றைய சூழலில் குறிப்பாக கிராமப்புற மக்களின் மனதில் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி அளிப்பதின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். பெண் கல்வி, குடும்ப உறவுகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்காதது, தொழில் சந்தையில் சமச்சீர் இன்மை போன்றவை இன்றும் தொடர்கிறது. இவை களையப்பட வேண்டும். அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி பெண்களின் தனித்துவத்தை இழக்க செய்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களின் மேம்பாட்டிற்கு வீட்டு பணிச்சுமை பெரும் தடையாக உள்ளது. குடும்பத்தினரின் மனமாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். சரியான வாய்ப்புகளும் உரிய சமூக சூழலும் இருந்தால் பெண்களின் சாதனை இன்னும் பன்மடங்காக உயரும். எனவே சமூகம், அரசியல், பொருளாதாரம், மற்றும் பொது வாழ்க்கையில் முழுமையான பங்கேற்பு அளித்து பெண்களை ஊக்குவிக்க வேண்டும். சினிமா போன்ற மக்கள் ஊடகங்களில் மகளிருக்கு தகுந்த மரியாதையும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும்.
பணிகளில் பாதுகாப்பு
புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டும் சரோஜா:- கடந்த 1991-ம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டி வருகிறேன். பெண்களுக்கு சில நேரங்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதனை சமாளிக்க வேண்டும். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கிறது. பெண்களுக்கு பணிகளில் பாதுகாப்பு உள்ளது. பெண்கள் உரிமைக்கான சட்டங்கள் பல உள்ளன. பெண்கள் மன தைரியத்தோடு செயல்பட வேண்டும். காவல்துறையின் உதவிகளை பெண்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சமூகத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். பெண்கள் தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
மன நிறைவு
விராலிமலையை சேர்ந்த வசந்தி:- பெண்கள் நாட்டின் கண்கள் என்ற வாசகம் பேச்சு வழக்கில் இருந்த காலம் மாறி தற்போது பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்று வரும் நிலை வந்துள்ளது. கடந்த காலத்தை காட்டிலும் தற்போது சமுதாயத்தில் பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரமானது மன நிறைவை அளிக்கிறது. இருப்பினும் இன்றளவும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கான உரிமையும் மதிப்பும் கிடைக்காமல் பல்வேறு வகையில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் என்றாலே ஆசிரியர்கள் அல்லது செவிலியர் உள்ளிட்ட வேலைக்கு தான் என்ற நிலை மாறி தற்போது பாலியல் பாகுபாடின்றி ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். அரசும் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் பெரும்பாலான பெண்கள் தயக்கமின்றி சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
ஆதனக்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி காயத்திரி:- மகளிர் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது கல்வி மட்டும் தான். என் கணவர் படிக்காதவர் என்றாலும் நான் பட்டப்படிப்பு முடித்துள்ளதால் என் வீட்டில் எனக்கு சம உரிமையையும், சமத்துவத்தையும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். என்னை பொறுத்தவரை பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வெற்றிநடை போட்டாலும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெண்களுக்கான சமத்துவமின்மை என்பது கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஓர் பெண் இருப்பாள் என்ற பொதுவான கருத்து நிலவினாலும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் அதனால் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் சவால்களும் தொடர்ந்த வண்ணமே இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. அரசு மற்றும் தனியார் துறை வேலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் ஒரு சில வேலை செய்யும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பது முரண்பாடாகவே உள்ளது. பெண்களை ஆண்களுக்கு அடிமையானவர்கள் என்ற மனப்போக்கில் உள்ளவர்களும் தாங்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் தான் பெண்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற மனப்பான்மை உள்ளவர்கள் தங்களுடைய மனநிலை மாற்றி பெண்களுக்குரிய சம உரிமையையும், சமூகத்தில் சம அந்தஸ்தையும் வழங்க வேண்டும்.
பணியிட உரிமை
அன்னவாசல் மெய்வழிச்சாலையை சேர்ந்த வக்கீல் சாலைமேதினி:- பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் வழங்க வேண்டும். தரமான கழிப்பிட வசதி, பணி செய்ய ஏற்ற சூழல் ஆகியவற்றை ஏற்படுத்தி தருவது அந்த நிர்வாகத்தின் கடமை. இரவு நேரத்தில் பெண்களை பணியில் ஈடுபடுத்தும் போது, பணியிடத்திலும், வீடு திரும்பும் வரையும் அவர்களுக்கான பாதுகாப்பை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். விசில் அடிப்பது, கேலி செய்து பாடுவது, தவறாக தொடுவது என தெரிந்தால், பெண்கள் தயங்காமல் புகார் செய்யலாம்.
அரிமளம் ஒன்றியம் கடையக்குடி கிராமத்தை சேர்ந்த வேளாண்மை கல்லூரி மாணவி அகல்யா:- அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற காலம் மாறி பெண்கள் படித்தால் தான் அந்த குடும்பம் முன்னேற்றமடையும் என்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. பணியாற்றும் ஒரு சில இடங்களில் பாலின சீண்டல்கள் இருந்து தான் வருகிறது. தற்போதுள்ள போக்சோ போன்ற சட்டங்களால் பெண்கள் பாதுகாப்பை அடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். மகளிர் எந்த சவாலையும் திறன்கள், நம்பிக்கை மற்றும் நளினத்துடன் ஏற்று கையாள தயாராகி விட்டனர். தற்போது பெண்களுக்கு வீடுகளிலும், பணியாற்றும் இடங்களிலும் சம உரிமை கிடைக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு சில இடங்களில் படிப்பறிவு குறைந்ததினால் அவர்கள் உரிமைகள் மறுக்கப்படலாம். இருப்பினும் வரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் பெண்கள் சம உரிமையோடு வாழ்வார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணமாக அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். தனிநபராக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பெண்கள் படிப்பு ரீதியாகவோ வேலை ரீதியாகவோ தைரியத்துடன் சென்று வருகின்றனர். இதுவே பெண்களின் முன்னேற்றத்திற்கு முதல் படி என கருதுகிறேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுரவம் தருவோம்
சர்வதேச மகளிர் தினம் என்ற ஒரு நாளை மட்டும் கொண்டாடிவிட்டு, அந்த நாளில் மட்டும் பெண்களை பெருமைப்படுத்துவது மட்டும் நம் இலக்காகி விடக்கூடாது. அது எந்த பயனையும் தந்துவிடாது. பெண்கள் இந்த சமூகத்தின் ஓர் அங்கம். அவர்கள் இந்த சமூகத்தின் உணர்வு, உயிர், கவுரவமும் கூட. பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் எல்லா நிலைகளிலும் ஆண்கள் தரும் கவுரவமே, மகளிர் தின உறுதிமொழியாக இருக்கட்டும். வாழ்நாளெல்லாம் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க பெண் இனத்துக்கு மகளிர் தின வாழ்த்துகள்.