< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆடி பெருக்கு விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
4 Aug 2023 12:43 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. புதுப்பெண்கள் தாலி சரடுகள் மாற்றிக்கொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளை ஒட்டி வாழும் மக்களே வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அதிலும் காவிரி ஆற்றங்கரை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறு கிடையாது என்பதால், சிலர் தங்களது வீடுகளில் உள்ள காவிரி தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாட பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நிறைய மக்கள் திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றனர். இதனால் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

குன்னம் தாலுகா சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலின் நீவா நதி என புகழ்பெற்ற வெள்ளாற்று கரையில் ஆடிப்பெருக்கையொட்டி திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணமாக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதியதாக மாற்றி சடங்குகளை செய்தனர். அவர்கள் தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். பின்னர் அருகே உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று பூஜை செய்தனர். மாலையில் வெள்ளாற்று கரைக்கு மக்கள் வந்து அமர்ந்து பொழுதை கழித்து விட்டு சென்றனர்.

கம்பத்து ஆஞ்சநேயர்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலிலும், அதன் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கம்பத்து ஆஞ்சநேயருக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய தீர்த்தம் எடுக்க 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அங்கிருந்து நேற்று காலை காவிரி ஆற்றில் குடங்களில் தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக சிறுவாச்சூருக்கு மதியம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனை தரிசனம் செய்து சில மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்கு காட்டு பாதை வழியாக புறப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மேல் வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு கொண்டு வந்த தீர்த்ததால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதனகோபாலசுவாமி கோவிலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆடிப்பெருக்கையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள், புதுமண தம்பதிகள் சென்று வழிபட்டு சென்றனர். பின்னர் புதுப்பெண்கள் தாலி சரடுகள் மாற்றிக்கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பகுதியில் உள்ள ஊட்டத்தூர் பிரிவு ரோடு செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் செல்லும் சாலையில் உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவிலுக்கும், பாடாலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி ஊர்வலம் நடந்தது. முன்னதாக அந்த கோவில்களுக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் காவிரி தீர்த்தத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இறைச்சி கடைகளில் கூட்டம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களில் பலர் தங்களது வீடுகளில் மதியம் உணவாக அசைவம் சமைத்து சாப்பிட்டனர். இதனால் காலையில் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்