அரியலூர்
குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
|தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அளவிலான குறுவட்ட போட்டிகள் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த சாத்தம்பாடி, குணமங்கலம், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சுத்தமல்லி,கோடாலிகருப்பூர், சிலால் உள்ளிட்ட 11 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கோ-கோ, வாலிபால், கேரம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
கேரம்போட்டி
இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 19 வயது கேரம் ஒற்றையர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் காரைக்குறிச்சி பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்றனர். 17 வயது ஒற்றையர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் குணமங்கலம் பள்ளி மாணவிகளும், 14 வயது ஒற்றையர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் குணமங்கலம் பள்ளி மாணவ-மாணவிகளும் முதலிடம் பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் 19 வயது பெண்கள் பிரிவில் காரைக்குறிச்சி பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். 17 மற்றும் 14 வயது இரட்டையர் பிரிவில் குணமங்கலம் அணிகள் வெற்றி பெற்றனர்.