கரூர்
குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்
|குளித்தலை அருகே குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
தடகள போட்டி
குளித்தலை அருகே அய்யர்மலையில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி பார்வையிட்டார். இதில் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. பலவகையான ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, தட்டு, ஈட்டி எறிதல் என 17 வகையிலான மொத்தம் சுமார் 40- க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட போட்டிக்கு தகுதி
மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று முன்தினமும், மாணவிகளுக்கான போட்டிகள் நேற்றும் என 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் குளித்தலை குறுவட்ட அளவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
சாம்பியன்
மாணவர்களுக்கான தடகள போட்டியில் அய்யர்மலையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவிகளுக்கான போட்டியில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், அனைத்து பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து போட்டிகளை நடத்தினர்.