சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று புகைப்படத்தோடு இருக்கிறது - முத்தரசன் குற்றச்சாட்டு
|மத்திய அரசின் சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதனம் பற்றி உள்ளது. அதில் மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று புகைப்படத்தோடு விளக்கப்பட்டு இருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக கூறி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதனம் பற்றி உள்ளது. அதில் மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று புகைப்படத்தோடு விளக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் அதை நீக்கவில்லை என்றால் அந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். அவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அத்துடன் இதை சாதகமாக பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கவும் பா.ஜனதா சதி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.