தேனி
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த இயக்கம் சார்பில், தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் இருந்து புறப்பட்டு தேனி நேரு சிலை சிக்னல் பகுதிக்கு வருவது என்றும், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செல்வது என்றும் திட்டமிட்டனர். ஆனால், இந்த நடைபயணத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டனர். இதையடுத்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நேற்று திரண்டனர். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.