கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: ஜெயக்குமார் வலியுறுத்தல்
|கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
திமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி, கணியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அம்மாணவியின் குடும்பத்தினர் சரியான, நேர்மையான உடற்கூறு ஆய்வு நடவடிக்கை மற்றும் உள்ளூர் காவல் துறை மீதான சந்தேகத்தினால் சிபிசிஐடி காவல் விசாரணை ஆகிய கோரிக்கைகளை வைத்தனர்.
மேலும், தங்களது மகளின் இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும். கேளாக் காதினராய், இந்த முதலமைச்சரும், அவர் வசம் உள்ள காவல் துறையினரும், கல்வித் துறையினரும், ஏதோ ஒரு இனம்புரியாத காரணத்திற்காக கைகட்டி, வாய்பொத்தி மவுனம் காத்தார்கள்.
வெகுண்டெழுந்த பொதுமக்கள் கடந்த நான்கைந்து நாட்களாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். கலவரத்தை அடக்க முடியாமல் இந்த அரசின் காவல் துறை கையறு நிலையில் விழி பிதுங்கி நின்றது. உளவுத் துறை சரியானபடி தகவல் சேகரித்து, காவல் துறைக்கும், அரசுக்கும் தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இக்கலவரத்தைத் தவிர்த்திருக்க முடியும்.
காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையையும், மகளை இழந்த பெற்றோரின் கோரிக்கைகளை உரிய நேரத்தில் இந்த அரசு ஏற்காததை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் தனது பேட்டியின்போது சுட்டிக்காட்டினார்.
அதிமுக உட்கட்சிப் பிரச்சினையை திசை திருப்ப, கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக அமைச்சர் எ.வ. வேலு திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார். முறையாக செயல்படும் எங்கள் இயக்கத்தில் ஒருசில துரோகிகளுக்கு தோள்கொடுத்து, தூண்டிவிட்டு, குழப்பம் விளைவிப்பது இந்த விடியா திமுக அரசுதான் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
நான் ஏற்கெனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள எங்களது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது என்றும், காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரியும் புகார் அளித்திருந்தேன். ஆனால், கலவரக்காரர்களுக்கு ராஜமரியாதையுடன் பாதுகாப்பு அளித்து, எங்கள் கட்சித் தொண்டர்களை விரட்டி அடித்தது விடியா அரசின் காவல் துறை. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ரவுடிகள் தலைமைக் கழக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கதவுகளை எட்டி உதைத்து உடைத்ததுடன், அங்குள்ள பொருட்களை சூரையாடியதுடன், கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.
இச்சம்பவங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த விடியா அரசு, எங்கள் தலைமைக் கழக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து அற்ப சந்தோஷம் அடைந்துள்ளது. அடுத்தவர் பிரச்சினையில் எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் தலையிட்டு குழப்பம் விளைவிக்கும் இந்த விடியா அரசு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு தடுமாறி வருவதை நாடறியும். உட்கட்சிப் பிரச்சினையில் எடப்பாடியார் குழம்பிபோய் இருப்பதாக எ.வ. வேலு கூறி இருக்கிறார். எந்த நிலையிலும் எங்களுக்கு குழம்பும் பழக்கமோ, அடுத்தவர்களைக் குழப்பும் பழக்கமோ இல்லை. அதற்கு சொந்தக்காரர்கள் தி.மு.க-வினர்தான் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிவர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. அதோடு, பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளில் உள்ள பொருட்களை சூரையாடி உள்ளனர். மேலும், அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 3500 மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் அடியோடு எரிந்து சாம்பலாகி உள்ளன. இதற்கு யார் பொறுப்பேற்பது? பாதிக்கப்பட்டுள்ள மாணவச் செல்வங்களுக்கு யார் பதில் அளிப்பது? அதற்குரிய நிவாரணம் என்ன? அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு தொடர்ந்து கல்வி கற்பார்கள் என்பதையும் இந்த அரசு விளக்க வேண்டும். மாணவியின் மரணத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக எ.வ. வேலு கூறுகிறார்.
எங்களின் தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்குள் கொள்ளையர்கள் அத்து மீறி நுழைந்து, கொள்ளை அடித்ததைக் கண்டு நாங்கள் எல்லாம் இதயம் வெதும்பி அழுதோம். அப்போது கைகொட்டி, சிரித்து வேடிக்கை பார்த்த இந்த ஆட்சியாளர்கள் போல் நாங்கள் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட வேண்டும்; மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக எடப்பாடியார் செயல்படுகிறார்.
தற்போது இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பள்ளி மாணவி ஸ்ரீமதி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த அப்பாவி மாணவி எப்படி இறந்தார் என்றும், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும், சட்டப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
அதே சமயத்தில், இச்சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டு, மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டவர்களையும், உறுதுணையாக இருந்தவர்களையும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்றமே இதன் விசாரணையை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளும் என்று கூறி உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், இந்த வழக்கை CBI வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.