சிவகாசி, சாத்தூர் பகுதியில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
|சிவகாசி, சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரடியாக சோதனை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சிவகாசி, சாத்தூர் அருகே தாயில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக நேற்று பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசுகளை பார்வையிட்டு பாதுகாப்பான பட்டாசுகளை தயாரிக்காத நிறுவனங்கள் முகவரிகளை தெரிந்து கொண்டு சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.
இன்று 2-வது நாளாக சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பேரியம் நைட்ரேட பயன்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? அல்லது கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.