விழுப்புரம்
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு:சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம்
|பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணை நடந்து வருவதால் இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர்.
மேலும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டுமான முத்தரசி நேற்று விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி, இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். இவரது சாட்சியம் முடிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் ஹேமராஜன் உள்ளிட்டோர், குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியிடம் குறுக்கு விசாரணை செய்ய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை 29-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.