< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்:  8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்: 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
7 Feb 2023 3:46 PM IST

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை 85 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

இதற்கிடையில், விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன்படி ஊராட்சித் மன்ற தலைவர் முத்தையா, புதுக்கோட்டையில் பயிற்சி காவலராக பணியாற்றும் வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா சுதர்சன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான 8 பேரிடமும், சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்