கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்
|நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
கோவை,
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.