< Back
மாநில செய்திகள்
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்; ஆஸ்பத்திரியில் அனுமதி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்; ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
20 Jun 2023 1:04 AM IST

நெல்லையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நெல்லையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர் வேடவர் காலனியைச் சேர்ந்தவர் செந்தூர்குமார் (வயது 55). இவர் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உட்பிரிவான ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு (ஓ.சி.ஐ.யு.) அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மயங்கி விழுந்தார்

செந்தூர்குமார் நேற்று காலையில் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாகவே வேலைக்கு புறப்பட்டு சென்றார். சி.பி.சி.ஐ.டி. ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்ற செந்தூர்குமார் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீசார் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தூர்குமாரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் விஷம் (குருணை மருந்து) குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பணியிட மாறுதல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், செந்தூர்குமார் கடந்த 7 ஆண்டுகளாக நெல்லையில் பணியாற்றுவதும், அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மண்டல சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட செந்தூர்குமார் தனது அலுவலகத்துக்கு முன்கூட்டியே வந்து விஷம் குடித்தது தெரியவந்தது. இடமாற்றம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்