< Back
மாநில செய்திகள்
அயனாவரத்தில் குதிரைப்படை போலீஸ்காரர் தற்கொலை -காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

அயனாவரத்தில் குதிரைப்படை போலீஸ்காரர் தற்கொலை -காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் பரிதாபம்

தினத்தந்தி
|
11 July 2023 10:34 AM IST

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் குதிரைப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர், ஈஸ்ட் கோட்ரஸ் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர், 2022-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 7 மாதங்களாக இவர், தன்னுடன் பணிபுரியும் புஷ்பராஜ் என்பவருடன் சென்னை அயனாவரம், வசந்தா கார்டன் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

அருண்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் பிரியா என்பவருடன் காதல் திருமணம் நடந்தது. பிரியா, நெல்லை ஆயுதப்படையில் பெண் போலீசாக அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் அருண்குமார், தான் தங்கி இருந்த வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து வீட்டுக்கு வந்த புஷ்பராஜ், அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், தூக்கில் தொங்கிய அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் மனைவி சண்டை

அருண்குமாரிடம், அவருடைய பெற்றோரை பார்க்க கூடாது. கவனிக்க கூடாது என்று அவருடைய காதல் மனைவி பிரியா, செல்போனில் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அருண்குமார், நேற்று அதிகாலை வழக்கம்போல் குதிரைப்படை அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார்.

பின்னர் காலை 10 மணிக்கு சப-இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் அனுமதி பெற்று அயனாவரத்தில் தான் தங்கி இருந்த வீட்டுக்கு வந்த அருண்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்