புதுக்கோட்டை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: கையகப்படுத்தும் நிலத்திற்கு மதிப்பு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பொதுமக்கள் மனு
|காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கையகப்படுத்தும் நிலத்திற்கு மதிப்பு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
நிலம் கையகப்படுத்தல்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளத்தூர் தாலுகா மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் மதிப்பு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
நரிமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவதை தனிநபர்கள் மூலம் நிறுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் அவதி அடைகிறோம். தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சத்தியமங்கலம் ஊாராட்சி சனையப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குழுமிமடை தூர்த்து போய் உள்ளது. இதனை பருவமழைக்கு முன்னதாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சார்லஸ் மனு அளித்தார்.
இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் கவிதா ராமு அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,500 மதிப்பீட்டில் பிரெய்லி வாட்ச், கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42,500 மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் 6 மாதத்திற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய 1,163 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விதமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது, ரூ.4 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு கேடயங்களை வழங்கினார். தோட்டக்கலை துறை சார்பில் ரூ.4.38 லட்சம் மதிப்பிலான காய்கறி மற்றும் கனிகள் விற்பனை வண்டி மற்றும் பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.