புதுக்கோட்டை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை அறிய குழு அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
|காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை அறிய குழு அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விளை நிலங்கள்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் பொன்னுசாமி பேசுகையில், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் இருப்பு இல்லை. விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.70 வீதம் கமிஷன் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார். விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் நடராஜன் பேசுகையில், விளை நிலங்களை வீட்டு மனைகளாக்குவதை தடுக்க வேண்டும் என்றார்.
குழு அமைத்தல்
காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் மிசா.மாரிமுத்து பேசுகையில், மாவட்டத்தில் நீர் நிலைகள், நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பு கோட்டாட்சியரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. நிலம் எடுப்பு விவரம் மற்றும் பணிகள் நடைபெறுவதை அறிய அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை கொண்ட குழு அமைக்க வேண்டும். பணிகள் தொடர்பாக மழை நீர் கடலில் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் ரமேஷ் பேசுகையில், ''கடந்த ஆண்டு அதிகமான மழையால் பாதிக்கப்பட்ட நெற்கதிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சம்பா சாகுபடி விரைவில் தொடங்க உள்ள நிலையில் அரசு டெப்போக்களில் விதை நெல் போதுமான அளவில் கிடைக்க செய்ய வேண்டும். நாகுடி கல்லணை கால்வாய் பகுதியில் களக்குடி ஏரியில் தைல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என்றார்.
உரங்கள் இருப்பு
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பதில் அளித்து பேசுகையில், ''விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது யூரியா 2,517 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 774 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 590 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4,165 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 698 மெட்ரிக் டன் யூரியா, 334 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 296 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,565 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது'' என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.