திருப்பத்தூர்
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும்
|தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 372 மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குடிநீர் வழங்க வேண்டும்
கூட்டத்தில் திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 2-க்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஒகேனக்கல்லில் இருந்து வரும் தண்ணீரை எங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஏலகிரி அருகே உள்ள முத்தனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தினரின் நிலங்களை சிலர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். எனவே எங்கள் கிராம மக்களை பாதுகாக்க ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மதம், சாதி அற்றவர்கள் சான்றிதழ்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் அக்கட்சியினர் அளித்துள்ள மனுவில், திருப்பத்தூரில் இருந்து சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி வழியாக தர்மபுரி மெயின்ரோட்டிற்கு செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். சுந்தரம்பள்ளி அருகே தைலம் தோட்டம் வட்டம் பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தரவேண்டும். நாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகத்தை பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தனர்.
திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் அவரது மனைவி சுகன்யா ஆகியோர் அளித்துள்ள மனுவில், எங்களின் மகன் ரணதிரா வியாஷ் (வயது 5), தேவதிக்ஷயா (4) ஆகியோருக்கு மதம், சாதி அற்றவர் என சான்றிதழ் வழங்கும்படி மனு அளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.