காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு
|காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் மேகதாது திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இன்றும், நாளையும் காவிரி டெல்டா பகுதிகளை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைத்தின் தலைவர் ஹல்தர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.