< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சேலம்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
5 Aug 2022 1:26 AM IST

மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. எனவே இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 68 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தமாக வினாடிக்கு 83 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

2½ லட்சம் கனஅடி நீர்

மேலும் காவிரி தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், ஒகேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இது மேலும் அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்த தண்ணீர் மேலும் மேலும் அதிகரித்து மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனிடையே மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

வெள்ளம் சூழ்ந்தது

ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தபடி பாறைகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை நிரம்பி காட்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணைக்கு வரும் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது.

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் கனஅடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 10 வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதே போன்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நவப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெரும்பள்ளம் பகுதியில் 5 குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேலம் மாவட்டம் தேவூர் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில் சுமார் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காவேரிப்பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராகு, கேது கோவில், கம்பத்தையன் கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது. அண்ணமார் கோவில் பகுதியில் பிரதான பாலம் முழுவதும் நீரில் மூழ்கியது.

காவிரி கரையோர பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் ஆகியவை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

முதல்-அமைச்சர் ஆலோசனை

இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

தற்போது குமரி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 44 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சி மாவட்டத்திற்கு விரைந்து செல்லவும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களை அனுப்பவும் கேட்டுக்கொண்டார்.

கள ஆய்வு

பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் கலெக்டர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்பு குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார்.

இரவு நேரத்தில்...

போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் வெளியேற்றுவதை அதிகப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவுப்பொருள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திடவும், நிவாரண உதவிகளை வழங்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவும், நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடவும் கேட்டுக்கொண்டார். கலெக்டர்கள் விழிப்போடு இருந்து இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அவசர கட்டுப்பாட்டு மையம்

பேரிடர் தொடர்பான தகவல்களை 24 மணி நேரமும் செயல்படும் மாநில, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும், 94458-69848 என்ற வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்