காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் மிதக்கும் பவானி பகுதி - மக்கள் அவதி
|காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி பகுதியில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பவானி,
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடிக்கும் மேல் உபரிநீர் செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன்காரணமாக பவானியில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நேதாஜி நகர், காவிரி வீதி, காவிரி நகர், தினசரி மார்க்கெட் பகுதி, பசுவேஸ்வரர் வீதி மற்றும் காவேரி பழைய பாலம் அருகே உள்ள பாலக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
பவானி தேவாரம் அருகே உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு பிணங்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து மயானத்திற்குள் தண்ணீர் புகுந்தது. காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக பழமை வாய்ந்த பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை இணைக்கும் பழைய பாலம் மூடப்பட்டது அதேபோல் பவானி கூடுதுறையில் பரிகாரங்கள் செய்யவோ, திதி, தர்ப்பணம் கொடுக்கவோ, குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதுறைக்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது.
மேலும் பவானியில் கந்தன் பட்டறை, அரிசி மார்க்கெட் அருகே உள்ள நகராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நகராட்சி கிழக்கு பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வருவாய் துறையின் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.