< Back
மாநில செய்திகள்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் காவிரியில் பிரச்சினை-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
அரியலூர்
மாநில செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் காவிரியில் பிரச்சினை-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
4 Sept 2023 12:00 AM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் காவிரியில் பிரச்சினை ஏற்படுவதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி பிரச்சினை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் காவிரியில் பிரச்சினை ஏற்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் நிர்ணயித்த அளவு தண்ணீரை கொடுக்க கர்நாடகா காங்கிரஸ் தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

காவிரி பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு பல்வேறு சாக்கு போக்குகளை கூறி வருகிறது. இதனை விவசாயிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சரியான நேரத்தில் தி.மு.க.வுக்கு பதில் சொல்வார்கள்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்'

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. இதில் எந்த தவறும் இல்லை. அடிக்கடி தேர்தல் வருவதால் அதில் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. 'ஒரே நாடு ஒரே தேர்தலால்' ஆட்சியாளர்கள் எந்த விதத்திலும் தங்களது கவனத்தை திசை திருப்பாமல் மக்களின் தேவைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும்.

மக்களின் ஆதரவு அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு அதிகரித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு மேல் மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. அவதூறு பிரசாரத்தின் மூலம் வெற்றி பெற முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது எடுபடாது.

அண்ணாமலை பாதயாத்திரை

மீண்டும் 3-வது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைவதற்கான சூழல் உள்ளது. கடந்த தேர்தலில் வென்ற நாடாளுமன்ற தொகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்வதற்கான சூழலும் உள்ளது. மதுரை மாநாட்டின் மூலம் அ.தி.மு.க. தனது ஆளுமை திறனை வெளிக்காட்டி உள்ளார்கள். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவிரி பிரச்சினையில் தி.மு.க. அரசியல் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்