< Back
மாநில செய்திகள்
காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
29 Aug 2023 10:17 PM IST

காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

பேட்டி

கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் கருத்தை பெறுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நிருபர்கள் சென்றனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தண்ணீர் திறந்து விட முடியாது என்று சொல்லி விட்டாரே, என்ன செய்ய போகிறீர்கள்?

பதில்:- நாம் ஏற்கனவே நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை வருகிறது.

கேள்வி:- மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் குறுவை சாகுபடி மோசம் அடைகிறது. எனவே மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்ய போகிறீர்களா?

பதில்:- மாற்று ஏற்பாடு என்ன செய்ய முடியும்?.

பயிர்களுக்கு காப்பீடு

கேள்வி:- குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

பதில்:- காப்பீடு இருக்கிறது. வழக்கம் போல் அது கிடைக்கும்.

கேள்வி:- கர்நாடகம் 45 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கனவே தராமல் இருக்கிறது. அதையும் கேட்டு பெற வலியுறுத்தப்படுமா?

பதில்:- பயிர்களுக்கு உயிர் தண்ணீர் கேட்கிறோம். தற்போது அதை கொடுத்தால் போதும். கர்நாடக அணையில் நீர்மட்டம் உயர்ந்தவுடன் அதை கேட்டு பெறுவோம்.

கேள்வி:- காரைக்காலில் செப்டம்பர் 17-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு ஆய்வு செய்யப்போவதாக சொல்கிறார்கள். அதில் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொள்வார்களா?

பதில்:- நாங்களும்தான் அந்த கமிட்டியில் இருக்கிறோம். நாம் இல்லாமல் எப்படி ஆய்வு செய்ய முடியும்?

மெத்தனப்போக்கு

கேள்வி:- கர்நாடகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெறுவதில் பிரச்சினை ஏற்படுகிறதே...

பதில்:- பருவமழை பொய்த்துபோனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குறைந்து போய் விடும். தண்ணீர் அதிகமாக இருக்கிற போது மாதம் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற கணக்கை கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் குறைந்து போனால் இருக்கிற தண்ணீரை முன் விகித அடிப்படையில் பங்கிட வேண்டும் என்று சொல்கிறோம்.

ஆனால் இதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனப்போக்காக செயல்படுகிறது. நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறோம். இது எனது குற்றச்சாட்டு ஆகும். கர்நாடகம் நமக்கு 49 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். நாம் நாளொன்றுக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குதான் தண்ணீரை கேட்கிறோம். தற்போது பயிரை காப்பாற்ற வேண்டும். அதற்கு அப்புறம் உரிமையை பற்றி பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்