< Back
மாநில செய்திகள்
காவிரி கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்..!
மாநில செய்திகள்

காவிரி கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்..!

தினத்தந்தி
|
20 Sept 2023 9:27 PM IST

வேலூர் அருகே அரியூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

வேலூர்,

வேலூர் அருகே அரியூர் ஏஜி நகரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அங்கிருந்த மின்கம்பத்தை விட உயரமாக சுமார் 25 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

வேலூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவிரி கூட்டுகுடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ராட்சத குழாய்கள் மூலமாக தண்ணீரானது நீரேற்றம் செய்யப்படும். அந்த வகையில் இன்று அரியூர் அருகே இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் அரியூர் ஏஜி நகர் பகுதியில் இருக்கக்கூடிய காவிரி கூட்டுகுடிநீர் குழாயின் மீது அந்த வழியாக சென்ற லாரி மோதியது. இதனால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 25 அடி உயரத்திற்கும் மேலாக தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து இயல்பு நிலை திரும்பியது. விரைவில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் சாலையோரம் இருக்கக்கூடிய குழாய்க்கு தடுப்பு ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்