திருச்சி
காவிரி விவகாரம் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்தாது; ஜவாஹிருல்லா பேட்டி
|காவிரி விவகாரம் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்தாது என்று ஜவாஹிருல்லா கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
அ.தி.மு.க. குரல் கொடுக்கவில்லை
இந்தியா கூட்டணி நாள்தோறும் வலுவடைந்து வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து கொண்டே செல்கிறது. அந்த கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் விலகி வருகின்றன. தற்போது அ.தி.மு.க.வும் வெளியேறியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு செல்லும் என்பது அழகிய கற்பனை.
ஏனென்றால் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா வந்தபோது, அ.தி.மு.க. அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் எந்த நிகழ்வுக்கு எதிராகவும் அ.தி.மு.க. இதுவரை குரல் கொடுக்கவில்லை. அதனை சிறுபான்மை மக்கள் மறக்கமாட்டார்கள்.
பிளவுபடுத்தாது
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். காவிரி தண்ணீர் வராததால் டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் காவிரி விவகாரம் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்தாது. பல்வேறு மாநில கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மேற்கு மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ்அகமது, கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.