திருச்சி
காவிரி, கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
|காவிரி, கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பியது
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் மீண்டும் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரியில் திறந்து விடப்படுகிறது. இடையில் பவானி ஆறு, அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணைக்கு வந்தது.
தண்ணீர் திறப்பு
இதில் நேற்று மாலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 71 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கதவணையில் இருந்து பிரியும் 4 பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரை ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
1.37 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 37 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது.
உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் 95 ஆயிரம் கன அடியும், காவிரியில் 42 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த பல வாரங்களுக்கு பின்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, முக்கொம்புவில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றப்பட்டதையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை பகுதியை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது, காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிப்பதை தவிர்க்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.