காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடகாவின் கருத்தை ஆதரிப்பதா? - வைகோ கண்டனம்
|தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் ஏப்ரல்-30-ல் நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், குழு செயலர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், 78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.
இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நிலுவையில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.
தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசும்போது, "மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை" என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவின் கருத்தையே ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வழிமொழிந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.