சென்னை
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம்
|சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மாலை, பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட மின்சார ரெயில் 1-வது நடைமேடையில் வேக கட்டுப்பாட்டை இழந்து, நடைமேடை மீது மோதி அங்கிருந்த 2 கடைகளுக்குள் புகுந்தது. பயணிகள் யாரும் இல்லாததாலும், கடையும் விடுமுறையில் இருந்ததாலும் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்துக்கு காரணமான ரெயிலை இயக்கிய டிரைவர் பவித்திரன் மீது கடற்கரை ரெயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின்பேரில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளரின் உத்தரவின்படி ரெயில்வே உயர் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இந்த ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது விசாரணையை அறிக்கையாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு சமர்பித்தனர். முதல்கட்ட விசாரணையில் ரெயிலில் பிரேக் பிடிக்காமல் பழுதடைந்தது தான் காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குழுவின் அறிக்கையில் விபத்துக்கு ரெயிலை இயக்கிய டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் ரெயிலில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை எனவும், பிரேக் பழுதாகவில்லை எனவும் விசாரணை குழுவின் அறிக்கையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ரெயில் டிரைவர் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.