< Back
மாநில செய்திகள்
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில்குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி
மாநில செய்திகள்

வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில்குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகங்கம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.

புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.

கவலை இல்லை

அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும், பயன்பாடு இன்றி 15-க்கும் மேற்பட்ட கார், ஜீப்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிற்பதால் அவை துரு பிடித்தும், சக்கரங்கள் மண்ணில் புதைந்தும் காணப்படுகிறது. அதுபோல், பெருந்திட்ட வளாகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களிலும் இதுபோன்று பயன்பாடின்றி பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.

காலக்கெடு விதிக்கலாம்

மணிகண்டன் (விவசாயி, டொம்புச்சேரி) :- தற்போது போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பழைய வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிகளை மீறி போலீசாரிடம் சிக்கும் போது, வாகனத்தின் மதிப்பை விடவும், அபராத தொகை அதிகமாக இருப்பதால் அவர்கள் அபராதம் செலுத்தவோ, வாகனத்தை மீட்டுச் செல்லவோ முன்வருவது இல்லை. எனவே அபராதம் செலுத்த குறிப்பட்ட காலக்கெடு விதித்து விட்டு அதற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காசி பாண்டியன் (கார் டிரைவர், ஆண்டிப்பட்டி) :- போலீஸ் துறை சார்பில் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் அந்த வழக்குகள் முடியும் போது ஏலம் விடப்படுகிறது. இதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்குள் பறிமுதல் செய்த வாகனங்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதனால், ஏலம் எடுப்பதற்கு பழைய இரும்பு வியாபாரிகளே அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள்.

குறிப்பிட்ட காலத்துக்குள் வாகனம் நல்ல நிலையில் இருக்கும் போதே ஏலம் விட்டால் புதிய வாகனம் வாங்குவதற்கு வசதியில்லாத மக்கள், இதுபோன்ற வாகனங்களை ஏலத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். அரசு அலுவலகங்களிலும் காலாவதியான பழைய வாகனங்களை நல்ல நிலையில் இருக்கும் போதே ஏலம் விட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதில் தனிக்கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

செயல்பாடு பாதிப்பு

ஈஸ்வரன் (வக்கீல், கம்பம்) :- உரிமையாளர் யார் என்று தெரியாமல் போலீஸ் நிலையங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களை வாகனத்தின் என்ஜின் எண், சேசிங் எண் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலர் உதவியுடன் கண்டறிந்து, கோர்ட்டு மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி போவதால், அடுத்தடுத்து நடவடிக்கை எடுப்பதில் தொய்வு ஏற்படலாம். பேட்டரி வாகனங்கள் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, பயன்பாடு இன்றி மண்வளத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விடவும், பயன்பாடற்ற வாகனங்களை முறையாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உரிமையாளர்கள் முன்வருவது இல்லை

போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:- "விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், மதுபோதையில் இருக்கும் நபர்களால் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் போன்றவை போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு முடிந்தவுடன் கோர்ட்டு அனுமதியுடன் அவை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாரும் உரிமை கோராத வாகனங்களும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏலம் விடப்படுகிறது. விபத்துகளில் சிக்கும் வாகனங்களுக்கு காப்பீடு, உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அதுதொடர்பாக அபராதம் விதிப்பார். இதனால், விபத்துகள் தொடர்புடைய வாகனங்களை பெரும்பாலும் உரிமையாளர்கள் வந்து திருப்பிச் எடுத்துச் செல்ல முயற்சிப்பது இல்லை. அவை போலீஸ் நிலையங்களில் தேங்கிவிடுகிறது. சமீப காலமாக வாகனங்களை உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், உரிமையாளர்கள் பலரும் திருப்பி எடுத்துச் செல்ல முன்வருவது இல்லை".

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்