தஞ்சாவூர்
உணவை தேடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்
|உணவை தேடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்
தஞ்சை மாநகரில் உணவை தேடி சாலைகளில் சுற்றித்திரியும் கால் நடைகள் விபத்துகளில் சிக்கி வருகின்றன.
மருத்துவக்கல்லூரி சாலை
தஞ்சையில் உள்ள முக்கிய சாலைகளில் மருத்துவக்கல்லூரி சாலையும் ஒன்று. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த சாலையின் வழியாக தஞ்சையில் இருந்து வல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன
இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. கால்நடைகளை வளர்க்கும் அதன் உரிமையாளர்கள் அதனை கட்டி வைக்காமல் அவிழ்த்து விடுவதால், அவைகள் உணவை தேடி ஊர்வலமாக சாலைகளில் சுற்றி திரிகின்றன.
ஒயரில் சிக்கியது
மருத்துவக்கல்லூரி சாலையின் நடுவே சிமெண்டு தடுப்பில் வளர்ந்துள்ள புல் தழைகளை தின்பதற்காக செல்கின்றன. இதனால் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளில் சிக்குகின்றன. இதில் வாகனத்தில் செல்பவர்களுக்கும் காயம் அடையும் நிலை ஏற்படுகிறது. சில சமயம் உயிர்பலியும் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இன்று கூட (நேற்று) தஞ்சை மாநகராட்சி அலுவலகம் அருகே சுற்றித்திரிந்த மாட்டின் கால்களில் சாலையோரம் கிடந்த ஒயர் சிக்கி கொண்டது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் அது தவித்தது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் அந்த மாட்டினை ஒயரில் இருந்து விடுவித்தனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்ளுக்கு அபராதம் விதிக்கவும் கேட்டுக்கொண்டனர்.