'தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
|தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கைவயலில் குடிநீரில் மலத்தை கலந்துள்ளார்கள், நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளார்கள்.
மேலும் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் தங்கள் கைகளில் சாதி அடிப்படையில் கயிறுகளைக் கட்டிக்கொள்கின்றனர். இது என்ன மாதிரியான கலாசாரம்? பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண் இந்துமதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரால் பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை." இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.