< Back
மாநில செய்திகள்
சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
3 Nov 2023 2:35 PM IST

காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்து மூன்றே நாட்கள் ஆன புதுமண தம்பதியை வீட்டிற்குள் நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கமே முக்கிய காரணம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதும்; பொதுமக்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தீமை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை என்பதை இனியாவது திமுக அரசு உணர வேண்டும்.

எனவே, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு, இந்த இரண்டு கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்