கடலூர்
முந்திரி தொழிற்சாலைகள் நாளை வேலை நிறுத்தம்
|மின் கட்டண உயர்வை கண்டித்து முந்திரி தொழிற்சாலைகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பண்ருட்டி
தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மலர் வாசகம், ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மின்சாரத்துறை சார்பாக தொழிற்சாலைகளுக்கு நிர்ணயத்துள்ள மின் கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தற்போது இருக்கும் நிலையைவிட கூடுதல் செலவீனங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு பெரும் இடர்பாடு உள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்துவது பெரும் பாதிப்பை உருவாக்கும் என்பதை உணர்ந்து கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் அமைப்புகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக கடந்த 11-ந் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து சங்கங்களும் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நாளை(திங்கட்கிழமை) தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே நமது முந்திரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாளை நடைபெறும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் வகையில் தங்களது நிறுவனங்களுக்கு விடுப்பு அளித்து பங்கேற்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.