சென்னை
அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணம்
|அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அமைந்தகரை செனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட உள்ளே சென்றார்.
அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.25 ஆயிரம் இருந்ததது. ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 ஆயிரத்தை எடுத்தவர்கள், பின்னர் அந்த பணத்தை கவனக்குறைவாக ஏ.டி.எம். எந்திரம் மீது வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
கேட்பாரற்று கிடந்த அந்த பணத்தை போலீஸ்காரர் தமிழ்மணி எடுத்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தமிழ்மணியின் இந்த நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பணம் யாருடையது? யார் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது? என்பது பற்றி போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் அந்த பணத்தை தவறவிட்டு சென்றவரிடம் சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.