முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து
|முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கை நேற்று சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை. போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை. ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது, எப்ஐஆரில் குறைபாடுகள் உள்ளன என கூறி சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டார்.