கரூர்
மின்வாரிய ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
|11-ம் வகுப்பு சிறுமியை காதலிக்க வற்புறுத்திய மின்வாரிய ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காதலிக்க வற்புறுத்தல்
தோகைமலையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 25). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நவீன் குமாரின் பெற்றோரிடம் கூறி அவரை கண்டிக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் பள்ளிக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்ற சிறுமியிடம் தன்னை காதலிக்கிறாயா இல்லையா? எனக்கூறி அவரது கையைப்பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தில் வழக்கு
இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நவீன் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நவீன் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.