கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
|கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சூர்யகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''1980-ம் ஆண்டு இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்தன. தற்போது 19 ஆயிரம் கழுகுகள் மட்டுமே உள்ளன. இயற்கையின் சுகாதாரப் பணியாளர்களாக செயல்படும் கழுகுகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன.
குறிப்பாக தமிழ்நாட்டில், கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு நிமிசிலைடு, ப்ளூநிக்ஸின், கார்ப்ரோபென் போன்ற மருந்துகளை சட்டவிரோதமாக செலுத்தப்படுகிறது. அந்த கால்நடைகள் இறந்ததும் அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. எனவே கழுகுகளை பாதுகாக்கும் வகையில் இந்த 4 மாவட்டங்களிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும். நிமிசிலைடு உள்ளிட்ட மருந்துகளை இந்த மாவட்டங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ. சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வருகிற ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்காவிட்டால் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்'' என்று எச்சரிக்கை விடுத்தனர்.