மதுரை
சதுரகிரி மலையில் நவராத்திரி விழாவுக்கு அனுமதி கோரிய வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
|சதுரகிரி மலையில் தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதி கேட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
சதுரகிரி மலைப்பகுதி
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் பகுதியில், ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவிற்காக 3 நாட்கள் தங்கியிருந்து வழிபட அனுமதிக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சதுரகிரி மலைப்பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக வனப்பகுதியாக உள்ளதால் அனுமதிதர முடியாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல, விழாக்களால் வனப்பகுதி முழுவதும் குப்பை சேரும் இடமாக மாறி விடுவதால் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று நீதிபதி தெரிவித்து இருந்தார். அத்துடன், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இடைக்கால உத்தரவு
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைக்கோவிலுக்கு செல்ல 3 பாதைகள் உள்ளன. அவற்றில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 350 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும் என்று போலீசார் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஒரு தரப்பினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் அனைவரும் கோர்ட்டை அணுகும் நிலை ஏற்படும். இதை அனுமதிக்க முடியாது. ஆனால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். இந்த முடிவை வனத்துறைதான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை இடைக்கால உத்தரவு வழங்க முடியாது என்று தெரிவித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.