பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கு: மதுரை ஐகோர்ட்டு அதிரடி
|மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாகத் தண்ணீர் பெறும் வகையில் 2வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்த பிறகு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்று பல்வேறு உத்தரவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.