போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு: இன்று விசாரணை
|ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய நேற்று காலதாமதம் ஆனதால் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுப்பதாகவும், அதற்குள் வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும் கூறினா்.
ஆனால், ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது. இதனால், மாலை 4.45 மணிக்கு மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி, வழக்கை தாக்கல் செய்து விட்டதாகவும், விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், நேரம் கடந்து விட்டதால், இன்று (புதன்கிழமை) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கித்தியோன் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.