< Back
மாநில செய்திகள்
வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
மாநில செய்திகள்

'வணங்கான்' பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

தினத்தந்தி
|
19 July 2024 4:30 PM GMT

‘வணங்கான்’ பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் 'வணங்கான்' என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 'வணங்கான்' என்ற தலைப்பை 2020-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வணங்கான்' என்ற பெயரில் படம் தயாரிப்பது 2022-ம் ஆண்டிலேயே மனுதாரருக்கு தெரியும் என்ற நிலையில், 2 ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது படம் வெளியாக இருக்கும் சமயத்தில் பணம் பறிக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, படத்தின் தலைப்பிற்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்பதால் 'வணங்கான்' என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்