மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
|பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கேமராக்களை நிறுவும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நீலகிரி, ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சிறிது நேரம் செயலிழந்தன. இது சம்பந்தமாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுபடியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரும் வழக்கு தொடராத நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.