பிராட்வே சாலை நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு - 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
|ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் அளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாற்று இடம் வழங்க மேலும் 2 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜூன் 23 ஆம் தேதிக்குள் மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், வழக்குப்பதிவு செய்யும் போது தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர்களும், தற்போது அதே பொறுப்பில் இருப்பவர்களும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.