முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு
|நிலமோசடி புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், என்னுடைய குன்னம்பட்டி, தோரணக்கல்பட்டியில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் சொல்லும் 4 பேருக்கு எழுதி தரும்படி மிரட்டினார். நான் அதற்கு முடியாது என சொன்னவுடன், அங்கிருந்த அடையாளம் தெரியாதவர்கள் என்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் அந்த சொத்தை எனது மகள் சோபனா பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். பின்னர் நான் அசல் செட்டில்மெண்ட் பத்திரங்களை, எனது உறவினரிடம் ஒப்படைப்பு செய்து எனது மகளின் பெயரில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றேன் என்று மனு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போலியான சான்றிதழை கொடுத்து எனது சொத்துக்களை பதிவு செய்து கொண்டனர். இதனை அறிந்த நான் உடனடியாக கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், அசல் ஆவணங்கள் என்னிடம் உள்ளது. போலியான சான்றிதழை கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என கூறி மனு கொடுத்தேன். எனவே மேற்படி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கி, எனது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.