பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு
|பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முன்வந்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் நிலங்களை வழங்க மாட்டோம் என உறுதியுடன் மறுப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இதையடுத்து விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து, ஏகனாபுரம் அருகே கூடியவர்களைத் தடுத்து போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் பெண்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் நேற்று மாலை விடுதலை செய்தனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 137 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியரின் உத்தரவை மீறுவது என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.