< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு: வனத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி...!
மாநில செய்திகள்

தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு: வனத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி...!

தினத்தந்தி
|
12 Nov 2022 12:21 PM IST

தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் வனத்துறையின் விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி நேரில் ஆஜரானார்.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் கடந்த செப்.27-ம் தேதி சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இருந்தது. அதை வனத்துறையினர் மீட்க முயன்றபோது உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை கடித்து விட்டு தப்பியோடியது. இந்நிலையில்,ரவீந்திரநாத் எம்.பி தோட்டத்தில் மறுநாள் இந்த சிறுத்தை வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தது. வனத் துறையினர் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து வனப் பகுதியில் புதைத்தனர்.

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து எம்.பி.தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடு வளர்த்த அலெக்ஸ்பாண்டியனை வனத்துறையினர் கைது செய்தனர்.

கால்நடை வளர்ப்போர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எம்.பி. தோட்டத்து மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அலெக்ஸ்பாண்டியன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எம்.பி.ரவீந்திரநாத் மீது இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் எம்.பி. ரவீந்திரநாத்திற்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்.பி. இன்று நேரில் ஆஜரானார். பின்னர், தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு குறித்து அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகின்றது.

மேலும் செய்திகள்