< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 40 பேரிடம் ரூ.4½ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 40 பேரிடம் ரூ.4½ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
17 Jun 2023 6:45 PM GMT

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 40 பேரிடம் ரூ.4½ லட்சத்தை மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சந்திரகலா (வயது 39). கெங்கராம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சரத்குமார், சரவணன், சத்தியமூர்த்தி. இவர்கள் 3 பேரும் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும், சந்திரகலாவிடம் சென்று, தாங்கள் தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், சீட்டுத்தொகை முதிர்வு காலம் முடிந்ததும் வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தையும் தருவதோடு, தீபாவளியையொட்டி பரிசு பொருட்களையும் தருவதாக கூறியுள்ளனர்.

ரூ.4½ லட்சம் மோசடி

இதை நம்பிய சந்திரகலா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த தனக்கு தெரிந்த 40 பேரிடமிருந்து மொத்தம் ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்தை வசூல் செய்து தீபாவளி சீட்டுத்தொகையாக சரத்குமார் உள்ளிட்ட 3 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அவர்கள் 3 பேரும், உரியவர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்களையும் வழங்காததோடு வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து சந்திரகலா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரத்குமார், சரவணன், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்