தேனி
பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்; ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது வழக்கு
|பெரியகுளத்தில் பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரை தெற்கு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மனைவி விமலா (வயது 76). டாக்டர். இவரது வீட்டின் அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி கவுன்சிலருமான ஓ.சண்முகசுந்தரத்திற்கு இடம் உள்ளது. இவர்கள் 2 பேருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று டாக்டர் விமலா, தனது வீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக தொழிலாளர்களை வரவழைத்து பராமரிப்பு பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓ.சண்முகசுந்தரம், பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது விமலாவுக்கு ஓ.சண்முகசுந்தரம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். அதன்பேரில் ஓ.சண்முகசுந்தரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஓ.சண்முகசுந்தரமும் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், டாக்டர் விமலா தனக்குரிய இடத்தில் வீடு கட்டியுள்ளார். ஆனால் அவரது வீட்டின் அருகில் உள்ள எனது இடத்தில் 3 அடி கேட்டு தகராறு செய்கிறார். ஓய்வுபெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் மாவட்ட சர்வேயரை வைத்து இடம் குறியீடு செய்யப்பட்டது. ஆனால் அவரது உறவினரான அம்பலவாணன் சில அதிகாரிகளை தூண்டி விடுகிறார்.
மேலும் எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.